சீனாவில் நிலச்சரிவு 1000 பேர் மீட்பு
பீஜிங் :மத்திய சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மலை சுற்றுலா தலம் ஷென்னோன்ஜியா. இங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து சாலைகளை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தன. நேற்று சாலைகள் சரிசெய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். நிலச்சரிவில் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கிழக்கு சீனாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு மழைக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஏக்கர் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும், 5700க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.