ஊட்டி :நிலம் உழுவது, அறுவடை செய்வது, நெல் அறுப்பது, வாய்க்கால் வெட்டுவது உள்பட 72 வகையான வேலைகளை செய்யும் விவசாய இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து ஊட்டி விவசாயி இறக்குமதி செய்துள்ளார். இதன் விலை ரூ.26.72 லட்சம். ஊட்டியை சேர்ந்த விவசாயி தேவராஜ். அமெரிக்காவில் இருந்து வேளாண் இயந்திரம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இந்த இயந்திரம் 72 வகையான விவசாய வேலைகளை செய்கிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: நீலகிரியில் 1998,ம் ஆண்டு முதல் தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டது. பெரும்பாலான சிறு விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி இடம்பெயர்ந்தனர். தேயிலை பறிப்பு, காய்கறி சாகுபடி தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அசாம், பீகார், சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து தேயிலை பறிக்க வேண்டிய நிலை உள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு மலை காய்கறி விவசாய பணியில் அனுபவம் இல்லாததால் இதற்கு யாரும் வருவதில்லை. இதனால், தொழிலாளர்கள் கிடைக்காமல் நீலகிரி காய்கறி விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 100 கூலி தொழிலாளர்களின் பணிகளை மேற்கொள்ளும் ஒரு புதிய டில்லர் இயந்திரத்தை இன்டர்நெட் மூலம் கேள்விப்பட்டேன். இது தற்போது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. நிலத்தை உழுவது, உருளைக் கிழங்கு அறுவடை செய்வது, கால்வாய் தோண்டுவது, நெல் அறுப்பது, வைக்கோல்களை கட்டுகளாக கட்டுவது, மரம் அறுப்பது உள்பட 72 வகையான விவசாய பணிகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரியவந்தது. இறக்குமதி வரியுடன் இதன் விலை ரூ.26.72 லட்சம் ஆகியுள்ளது. இதை இயக்க, பயிற்சி பெற்ற ஒரு தொழிலாளி போதும். விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை போக்க இந்த இயந்திரம் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் மலை காய்கறி விவசாயம் எளிதாக செய்ய முடியும். மழை காலத்தில் சேறும் சகதியுமாக உள்ள இடங்களில்கூட இந்த இயந்திரத்தை கொண்டு சென்று உழவு பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு தேவராஜ் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook