சென்னை ::தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டீசல், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான எம்ஆர்பிஎல் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலை, கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ளது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேத்ராவதி ஆற்றில் இருந்து வழங்கப்படும் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பெட்ரோலியம், டீசல் உற்பத்தியின் ஒரு பிரிவு கடந்த 12ம் தேதி முதல் மூடப்பட்டது. மேலும், சிக்கல் ஏற்படவே கடந்த 16ம் தேதியில் இருந்து எம்ஆர்பிஎல் சுத்திகரிப்பு ஆலை முழுவதும் மூடப்பட்டது. இதனால், கர்நாடக மாநிலம் மட்டுமின்றி தமிழகத்திலும் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 600க்கும் அதிகமான பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஐஓசி மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள், தங்களது பெட்ரோல் பங்க்குகளுக்கு போக மீதியை எச்பிசிஎல் பங்க்குகளுக்கு வழங்குகின்றன. இந்நிலையில் டீசல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடனடியாக சிங்கப்பூரில் இருந்து கப்பலில் டீசலை ஐஓசி வரவழைத்துள்ளது. எனவே, டீசல் தட்டுபாடு படிப்படியாக குறையும் என்று ஐஓசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் யூரோ,4 பெட்ரோல், டீசல் விற்பனை ஆகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தவிர்த்து மற்ற இடங்களில் யூரோ,3 பெட்ரோல், டீசல் விற்பனை ஆகிறது. அங்கெல்லாம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எம்ஆர்பிஎல் ஆலையில் தண்ணீர் விநியோகம் கடந்த வெள்ளியன்று சீரடைந்து விட்டதாக சொல்கிறார்கள். அந்த ஆலை முழு உற்பத்தியை தொடங்கினால் மட்டுமே டீசல், பெட்ரோல் பிரச்னை தீரும். அல்லது மணலியில் உள்ள சிபிசில் தனது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook