திருவொற்றியூரில் பன்றி காய்ச்சல் பீதி : நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவொற்றியூர் :திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் தனரமேஷ் (அதிமுக) தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்த விவாதம்: அமுல்ராஜ் (அதிமுக): சுப்ரமணியம் நகரில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட அரசு நிலத்தில் மாநகராட்சி சார்பில் மருத்துவமனை அல்லது பூங்கா அமைக்க வேண்டும். செல்வம் (அதிமுக): கத்திவாக்கத்தில் குழாயில் குடிநீர் வராததால் லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும். தன்ராஜ் (அதிமுக): எனது வார்டில் உள்ள ஒருவருக்கு பன்றி காய்ச்சல் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன் (அதிமுக): எனது வார்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் குடோனிலிருந்து அதிக சத்தம் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தலைவர் தனரமேஷ்: கத்திவாக்கத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சுகாதார அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எண்ணூர் நெட்டுக்குப்பம் அருகே உள்ள ஆற்றில் அனுமதியில்லாமல் தனியார் நிறுவனம் 2 சிறிய கப்பல்களை உடைக்கும் பணியை செய்து வருவதாகவும் இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் வந்துள்ளது. மேயரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த ரூ.1 கோடியும், கடல் அரிப்பை தடுக்க ரூ.58 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்வது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு திருவொற்றியூர் மண்டலத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.