இறுதி சுற்றுவட்ட பாதையில் : ரிசாட் 1 செயற்கை கோள் இன்று முதல் படம் அனுப்பும்
சென்னை: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட ரிசாட் 1 செயற்கை கோள் அதன் இறுதி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரிசாட் 1 ரேடார் செயற்கைகோள், பிஎஸ்எல்விசி19 ராக்கெட் மூலம் கடந்த 26ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அதிகாலை 5.47 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 18வது நிமிடத்தில் 470 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, செயற்கைகோளை அதன் இறுதி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டது. செயற்கைகோளில் உள்ள எரிபொருளை பயன்படுத்தி 536 கிலோ மீட்டர் உயரத்தில் ரிசாட் 1 செயற்கைகோள் அதன் இறுதி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. செயற்கைகோளில் உள்ள சூரிய மின்சக்தி கருவிகளும், ரேடாரும் சிறப்பாக செயல்படுகிறது. செயற்கைகோள் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், 26ம் தேதி கூறியபடி செயற்கைகோள் இன்று தனது முதல் படத்தை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இஸ்ரோ அனுப்பிய 20 தொலையுணர்வு செயற்கைகோள்களில் ரிசாட் 1 செயற்கைகோள் மிகவும் நவீனமானது. ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள செயற்கைகோள்களால் மேகமூட்டமாக இருக்கும் சமயங்களில் துல்லியமாக படம் எடுக்க முடியாது. ஆனால், ரிசாட் 1 செயற்கைகோள் 24 மணி நேரமும் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுக்கும். ரிசாட் 1 திட்டத்துக்கு இஸ்ரோ ரூ.500 கோடி செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.