மயிலாடுதுறை: மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொள்ளும் அவசர கூட்டம் இன்று மாலை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நித்யானந்தா நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. சமய நெறிமுறைகளை பரப்பவும், தமிழ் மொழியை வளர்க்கவும் 2,500 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தை திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இதன் 292வது ஆதீனமாக 1980ம் ஆண்டில் இருந்து அருணகிரி நாதசுவாமி இருந்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென்று மதுரை 293வது ஆதீனமாக நித்யானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று முன்தினம் மதுரை ஆதீனம், நித்யானந்தாவுக்கு பட்டம் சூட்டினார். ஆனால் விழாவில் மரபுபடி தமிழகத்திலுள்ள வேறு எந்த ஆதீனங்களும் அழைக்கப்படவில்லை. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் ஆதீனத்தை நியமிக்க பல்வேறு விதிமுறைகள் உள்ள நிலையில், பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்யானந்தாவை ஆதீனமாக நியமித்துள்ளதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் இந்த விவகாரம், தமிழகத்தில் உள்ள மற்ற ஆதீனங்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பொதுவாக சைவ பிள்ளைமார் இனத்தை சேர்ந்தவர்களே ஆதீனமாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளதால், மற்ற ஆதீனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஆதீனங்களின் அவசரக்கூட்டம் இன்று மாலை மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள ஆதீன கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு இந்த கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook