ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலையாகிறார். இதற்கான ஒப்பந்தத்தில் மாவோயிஸ்ட் தூதர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மாவோயிஸ்ட்கள் மீதான வழக்குகளை மறுபரிசீலனை செய்ய அரசு உயர் மட்ட கமிட்டி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை கடந்த 21ம் தேதி மாவோயிஸ்ட்கள் கடத்தினர். புதிதாக உருவாக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுடன் சகஜமாக பழகி, அவர்கள் வாழ்க்கை தரம் உயர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் அலெக்ஸ். குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து தவறான பாதைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாவோயிஸ்ட்கள் அவரை கடத்தியதாக கூறப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி ஆஷா என்கிற புஷ்ப பாக்கியம் இப்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கலெக்டரை விடுவிக்க வேண்டும் என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், அலெக்ஸை விடுவிக்க சிறையில் இருக்கும் 17 மாவோயிஸ்ட்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதுதொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹர்கோபால், பி.டி.சர்மா ஆகியோரை தூதர்களாக நியமித்தனர்.
அரசு தரப்பில் முன்னாள் தலைமை செயலர்கள் நிர்மலா புச், மிஸ்ரா ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். அரசு தூதர்களுடன் மாவோயிஸ்ட் தூதர்கள் 3 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த விபரங்களை மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு தெரிவிக்க ஹர்கோபாலும் பி.டி.சர்மாவும் 2 தினங்களுக்கு முன் அரசு ஹெலிகாப்டரில் தனியாக வனப்பகுதிக்கு சென்றனர். மாவோயிஸ்ட் தலைவர்களுடன் பேசிவிட்டு நேற்றுமுன்தினம் சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் திரும்பினர். இதற்கிடையில் சிறையில் இருக்கும் 8 மாவோயிஸ்ட்களை 48 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் என மாவோயிஸ்ட்கள் நேற்று புதிய கெடு விதித்தனர். 8 மாவோயிஸ்ட்களை விடுதலை செய்து தண்டேவடா மாவட்டம் டட்மெட்லா கிராமத்துக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக கலெக்டரை விடுவித்து விடுவதாக தெரிவித்தனர். இந்த நிபந்தனையை நிறைவேற்றாவிட்டால் அவர்களுடைய மக்கள் மன்றத்தில் அலெக்ஸ் நிறுத்தப்படுவார் எனவும் எச்சரித்தனர். இதனால் அலெக்ஸை மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தூதர்களுக்கிடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் நேற்று மாலை ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி சிறையில் இருப்பவர்கள் யாரையும் உடனடியாக விடுவிக்க தேவையில்லை. மாவோயிஸ்ட்கள் மீதான வழக்குகளை மறுபரிசீலனை செய்ய உயர் மட்ட கமிட்டி அமைக்கப்படும். இந்த கமிட்டியில் மாநில தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர். கலெக்டர் விடுவிக்கப்பட்டவுடன் இந்த கமிட்டி செயல்பட துவங்கும். உள்துறை செயலர் என்.கே.அஸ்வால் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் இருதரப்பு தூதர்களும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் ராமன் சிங், நாளைக்குள் கலெக்டர் விடுதலை செய்யப்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook