ஐ.நா. ஒப்பந்தப்படி ரஷ்யாவில் 60% ரசாயன ஆயுதம் அழிப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் 60 சதவீத ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகில் வல்லரசு நாடுகளிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒழிக்கும் வகையில் சர்வதேச அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 195 நாடுகளில் 188 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கடந்த 97ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி கையெழுத்திட்டன. அங்கோலா, வடகொரியா, எகிப்து, சோமாலியா, சிரியா போன்ற நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
ஒப்பந்தப்படி அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை அழித்து வருகின்றன. அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகையில், கடந்த ஜனவரி 31ம் தேதி வரை 50 ஆயிரம் டன்னுக்கு அதிகமாக அல்லது 73 சதவீத அமெரிக்க ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இதுவரை 90 சதவீத ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,000 டன் ஆயுதங்களை, 2021ம் ஆண்டுக்குள் அழித்துவிடுவோம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை கூறுகையில், ரஷ்யாவில் நேற்று வரை 25 ஆயிரம் டன் அல்லது 62 சதவீத ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்குள் 100 சதவீத ஆயுதங்களையும் அழித்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் அல்பேனியா, லிபியா, ஈராக், இந்தியா, தென்கொரியா போன்ற நாடுகள் ரசாயன ஆயுதங்களை முற்றிலும் அழித்துவிட்டதாக அறிவித்துள்ளன.