சென்னை: மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவர்னர் ரோசய்யா: இந்த நாளில் தொழிற்சங்கங்கள் உருவானதை பார்ப்பதோடு, அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் நினைத்து பார்க்க வேண்டும். சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு பணி தரத்தை நிர்ணயிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற எனது லட்சியப் பயணத்துக்கு தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.
திமுக தலைவர் கருணாநிதி: தொழிலாளர் மேம்பாட்டிற்காக பாடுபட்டது திமுக. ஆட்சி பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் தொழிலாளர் சமுதாயத்தை உருக்குலைத்திடும் செயல்களில் ஈடுபடுவது அதிமுகவின் செயல். தொழிலாளர் நலன்காக்கும் சட்ட திட்டங்கள் எக்காலத்திலும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற சிந்தனையை எல்லோருக்கும் ஏற்படுத்தி, இந்த ஆண்டின் மே தின விழா எழுச்சியுடன் நடைபெற வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்: தொழிலாளர்களின் உரிமை, பாதுகாப்பு சட்டங்களை மத்திய அரசு உருவாக்கி தந்துள்ளது. இந்நன்னாளில் விழா கொண்டாடி மகிழும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்: அனைத்து தொழிலாளர்களும் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு ஒட்டு மொத்த இந்திய மக்கள் அனைவரும் முன்நின்று செயல்பட வேண்டும். இந்த உறுதிமொழியை மே தின நாளில் எடுத்துக் கொள்வோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தொழிலாளர்களுக்கு பொருளாதார விடுதலை கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படும் அவலம் தொடர்கிறது. இதை போக்கி அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற பாமக தொடர்ந்து போராடும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உலக மயமாக்கலில் பன்னாட்டு வணிகம் சூதாட்டகாரர்களுக்கு உரியதாக மாறி வரும் போக்கை மாற்ற வேண்டும். பிறர் உழைப்பை சுரண்டி வாழும் கொடுமையை மாற்ற இந்நாளில் சூளுரைக்க வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook