திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் (45). இவர் பஸ் நிலையம் அருகே பீரோ கடை வைத்துள்ளார். கடந்த 11ம் தேதி மாலை திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த குமரன், வெட்டு மூர்த்தி, கோபி ஆகியோர் கடைக்கு சென்று கடனுக்கு பீரோ கேட்டனர். கண்ணப்பன் தர மறுத்ததால் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். சென்னை தனியார் மருத்துவமனையில் கண்ணப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து 3 பேரையும் தேடினர். அவர்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், இரு தினங்களுக்கு முன்பு அந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 2வது வார்டுக்கு திமுக சார்பில் அருள்மணி, சுயேச்சையாக பேகன் ஆகியோர் போட்டியிட்டனர். பேகன் வெற்றி பெற்றார். அவர் வெற்றிக்கு கண்ணப்பன் உழைத்தார். இதனால் கண்ணப்பனை தீர்த்து கட்ட அருள்மணி முடிவு செய்தார். அவர் எங்களை அழைத்து ஒரு தொகை கொடுப்பதாக கூறினார். அதன்பேரில் கண்ணப்பனை வெட்டினோம். அவர் ரத்த வெள்ளத்தில் துடித்ததால் இறந்து விடுவார் என்று தப்பி விட்டோம். திருப்பதியில் தலைமறைவாக இருந்தோம். போலீஸ் நெருக்கடி அதிகமானதால் கோர்ட்டில் சரண் அடைந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கண்ணப்பனை கொலை செய்ய தூண்டியதாக அருள்மணியை (50) நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இவர் முன்னாள் எம்எல்ஏவின் அண்ணன் மகன்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook