டிக்கெட் கேட்ட கண்டக்டருக்கு அடி : வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை: பஸ்சில் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் அரசு பஸ் 92 பி கோயம்பேடு புறப்பட்டது. கண்டக்டர் மோகன் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த மாம்பாக்கத்தை சேர்ந்த பாரதிதாசனிடம் (38) டிக்கெட் எடுக்கும் படி மோகன் கேட்டுள்ளார். அதற்கு அவர், டிக்கெட் எடுக்க மறுத்ததோடு கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் பாரதிதாசன், மோகனை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து கண்டக்டரை தாக்கிய பாரதிதாசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.