வாஷிங்டன் : உலகம் முழுவதும் தினமும் ரூ.36 கோடி மதிப்பிலான செல்போன்கள் காணாமல் போகின்றன என்கிறது ஒரு சர்வே. டீக்கடை, சர்ச், மெக்கானிக் ஷாப் ஆகிய இடங்களில் மறந்து வைப்பதில்தான் பெரும்பாலான செல்போன்கள் காணாமல் போகின்றன என்றும் தெரியவந்துள்ளது. இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள், பரிமாறப்படும் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம். இதை தடுக்கும் பணியை ‘மொபைல் செக்யூரிட்டி’ நிறுவனங்கள் செய்து வருகின்றன. தகவல்களை பத்திரமாக பாதுகாப்பதற்கு ஏற்ற சாப்ட்வேர்களை தயாரித்து கொடுப்பது, தொலையும் போன்களை ஜிபிஎஸ் உதவியுடன் கண்டுபிடிப்பது இவர்களது பணி. செல்போன்கள் தொலைவது பற்றி அமெரிக்காவை சேர்ந்த ‘லுக்அவுட்’ செக்யூரிட்டி நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ள சுவாரஸ்ய தகவல்கள்:
உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ரூ.36.40 கோடி மதிப்பிலான செல்போன்கள், ஸ்மார்ட் போன்கள் காணாமல் போகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் கடந்த ஆண்டில் ரூ.20.80 கோடி செல்போன்கள் காணாமல் போயுள்ளன. டீ, காபி கடை, சர்ச், மெக்கானிக் ஷாப் ஆகிய இடங்களில்தான் பெரும்பாலும் எல்லாருமே செல்போனை தொலைக்கின்றனர். மூன்றில் 2 போன்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிக்குள்தான் காணாமல் போகின்றன. சிட்னிவாசிகள் சராசரியாக 2 ஆண்டுக்கு ஒருமுறை செல்போனை தொலைக்கின்றனர். உலகிலேயே செல்போனை தொலைப்பதில் முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர மக்கள்தான். இவ்வாறு சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. தொலைத்த, திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தரச்சொல்லி விண்ணப்பித்த 1.5 கோடி பேர் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த சர்வே நடத்தப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook