அரசியல் தலைவர்களை சந்திக்க ஐ.நா தலைவர் பான் கி மூன் இந்தியாவில் 3 நாள் பயணம்
ஐ.நா : ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இதுகுறித்து பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது: பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இந்திய நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுடன், பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக புதன்கிழமை (நாளை) அமெரிக்காவில் இருந்து டெல்லி செல்கிறார். டெல்லி மற்றும் மும்பையில் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மூன்று நாள் இந்தியாவில் பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது ஜமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவான் மற்றும் தொழிலதிபர்களுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து பான் கி மூன் ஆலோசனை நடத்துகிறார்.
இவ்வாறு செய்தித் தொடர்பாளர் கூறினார்.