கோவை :தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ முறை அமல்படுத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு நான்கு மாதங்கள். முதல் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகம் மட்டுமே பயன்படுத்தப்படும். 6,7,8 வகுப்புகளுக்கு மட்டும் 2 புத்தகம் தேவைப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரு புத்தகமும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலுக்கு ஒரு புத்தகமும் தேவை. முதல் பருவத்தில் ஒவ்வொரு பாடத்திலும் சேர்க்கவேண்டிய பகுதிகள் ஏற்கனவே வரையறை செய்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட பாடங்களையும் ஒருங்கி¬ணைத்து முதல் பருவத்திற்கு புத்தகங்கள் தனித்தனியே தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பயன்படுத்திய புத்தக எடையை ஒப்பிடும்போது தற்போதைய புத்தக எடை 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆண்டு முழுவதும் சராசரியாக தினமும் 7 கிலோ எடை கொண்ட புத்தகங்கள் மற்றும் அதே அளவுக்கு நோட்டுகளை எடுத்து செல்லவேண்டும். முப்பருவ முறையால் ஒரு பருவத்திற்கு பயன்படுத்தும் புத்தகத்தின் எடை 3.25 கிலோவாக குறைந்துள்ளது. நோட்டு புத்தக எண்ணிக்கை தேவையும் குறைக்கப்பட்டுளளது. 6ம் வகுப்பு மாணவர் அதிகபட்சமாக 5 கிலோ தான் சுமக்கவேண்டியிருக்கும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளி செல்லும் மாணவர்களின் வயது மற்றும் உடல் எடையை ஒப்பிடுகையில் புத்தகங்களின் எடை 15 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அளவுக்கு மீறிய புத்தகங்களை சுமக்கும் மாணவர்கள் உடல் ரீதியான பாதிப்பு மற்றும் எலும்பு சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மாணவர்களின் படிப்பு திறன் பாதிக்கப்படுகிறது. தற்போது புத்தக எடை குறைந்ததன் மூலம் அத்தகைய பாதிப்புகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook