மின்தடையால் சிக்னல் கோளாறு : மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை :மின்தடையால் சிக்னல் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து மின்சார ரயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
கடற்கரை முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் கோடம்பாக்கம் வழியாக தாம்பரம் சென்றடையும். இந்நிலையில் கோடம்பாக்கம் , மாம்பலம் ரயில் நிலையத்துக்கு இடையே ஏற்பட்ட மின்தடையால் சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால் நேற்றிரவு 9.15 மணி முதல் 10.15மணி வரை அந்த வழியாக வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் காத்திருந்த ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.