சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல் : தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்
கொழும்பு :தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை இலங்கை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 12 பேர் குழு 6 நாள் பயணமாக இலங்கை வந்துள்ளது. இங்கு அதிபர் ராஜபக்சேவை சந்தித்த பின் நிருபர்களிடம் சுஷ்மா கூறியதாவது: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வு பணிகளின் அவசரத்தை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும்,
போரால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மறுவாழ்வுக்கான கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல், சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவித்தல், இடம்பெயர்ந்த தமிழர்களை சொந்த இடங்களில் மறுகுடியமர்த்தல், இந்திய நிதியுதவியில் நடக்கும் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்தல் போன்ற பல்வேறு மறுவாழ்வு திட்டங்களை அவசர கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். தமிழர்கள் வாழும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை குறைப்பது குறித்தும் பேசினேன். அதற்கு, தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ராணுவம் குறுக்கிடாது என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.