புத்தாண்டு பூஜைக்கு வைத்திருந்த 15 பவுன், ரூ.25 ஆயிரம் கொள்ளை : துரைப்பாக்கத்தில் கதவை உடைத்து துணிகரம்
துரைப்பாக்கம் : துரைப்பாக்கத்தில் கார்பென்டர் வீட்டின் கதவை உடைத்து, புத்தாண்டு பூஜைக்காக வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பல்லவன் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (52), கார்பென்டர். ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டில் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து சிறப்பு பூஜை நடத்துவார். இதில் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பூஜையில் வைப்பார். இந்த ஆண்டும் பூஜை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக நேற்று மாலை 15 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் மற்றும் பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தார் ராஜவேலு. பின்னர் உறவினர்களை அழைக்க குடும்பத்துடன் சென்று விட்டு இன்று காலை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து துரைப்பாக்கம் போலீசில் ராஜவேலு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.