இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் பார்லிமென்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையினர் கடந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொன்றனர். அதன்பின், ஆளில்லாத உளவு விமானங்கள் டிரோன்கள் மூலம் திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களும் ராணுவ வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாயினர். அனுமதி இல்லாமல் அத்துமீறி தன்னிச்சையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் பார்லிமென்ட் நேற்று கூடியது. அப்போது, பாகிஸ்தான் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பார்லிமென்ட் கமிட்டி அளித்திருந்த 14 பரிந்துரைகள் குறித்து உறுப்பினர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர், அமெரிக்கா அத்துமீறி டிரோன்கள் மூலம் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். நேட்டோ படைகள் தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தானுக்கும் அணுசக்தி தொடர்பான உதவிகளை அமெரிக்காவும் மற்ற நாடுகளும் செய்ய வேண்டும். காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து சுமுக பேச்சு நடத்த வேண்டும். இரு தரப்பினரும் மதிக்கும் வண்ணம், பயனுள்ள வகையில் அந்த பேச்சு அமைய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பிரதமர் யூசுப் ரசா கிலானி பேசுகையில், பார்லியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook