இன்ஜி, மருத்துவ கல்லூரியில் பெண்களுக்கு இலவச கல்வி : உ.பி. முதல்வர் அறிவிப்பு
லக்னோ : உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரிகளில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற இசபெல்லா தோபர்ன் பெண்கள் கல்லூரியின் 125வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் அகிலேஷ் யாதவ், மனைவி டிம்பி ளுடன் கலந்து கொண்டார். அவருக்கு கல்லூரி மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விழாவில் அகிலேஷ் பேசியதாவது: பெண்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பெண்களுக்கு மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பு இலவசமாக அளிக்கப்படும். மாயாவதியின் ஆட்சியில் அவரது சிலைகளுடன் கூடிய பூங்காக்கள்தான் அமைக்கப்பட்டன. இந்த ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும். சமாஜ்வாடி கட்சி ஆங்கிலத்துக்கு எதிரானது அல்ல. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. இவ்வாறு அகிலேஷ் பேசினார். இசபெல்லா கல்லூரி விடுதி கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவியையும் அகிலேஷ் அறிவித்தார். கல்லூரியின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு தபால் தலையையும் அவர் வெளியிட்டார்.