மதுராந்தகம் : மதுராந்தகம் பகுதியில் தினம் 9 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயம் முடங்கி உள்ளது. கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னையில் தினம் 2 மணி நேரம், மற்ற பகுதிகளில் 4 மணி நேரம் மின்வெட்டு என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மதுராந்தகம் பகுதியில் தினம் 9 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரை, பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை என்று மொத்தம் 9 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதனால், இப்பகுதியில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களும் முடங்கி போயுள்ளன. பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாததால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயம் அல்லாத வேறு தொழில்களை நாட தொடங்கியுள்ளனர். இதற்காக, விவசாயிகளின் குடும்பத்தினர் குறைந்த சம்பளத்துக்கு மறைமலை நகர், தாம்பரம் போன்ற இடங்களில் இருக்கும் தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இதே நிலைதான் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் ஏற்படுகிறது. மாணவர்கள் படிக்கும் நேரம், வீடுகளில் சமையல் செய்யும் நேரம் மற்றும் தூங்கும் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயில் காலம் என்பதால், மின்சாரமின்றி இரவில் தூங்க முடிவதில்லை. இரவு தூக்கம் கெடுவதால் உடல் நலமும் பாதிக்கிறது. இது பற்றி மின்வாரிய அலுவகத்தில் கேட்டால், பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் பதில் தருவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், தினம் 4 மணி நேரம் மின்வெட்டு என்று அரசு அறிவித்து விட்டு, 9 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்துவது சரியல்ல. எனவே இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook