நியூ ஹெவன் : நியூயார்க்கில் இந்தி நடிகர் ஷாருக்கானை 2 மணி நேரத்துக்கு மேல் பிடித்து வைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்களை, அல் கய்தா தீவிரவாதிகள் தகர்த்த பின், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில் யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற, இந்தி நடிகர் ஷாருக்கான் நேற்று தனி விமானத்தில் நியூயார்க் சென்றார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, யேல் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். அத்துடன் தெற்காசிய சொசைட்டியின் தலைவராகவும் இருக்கிறார். இவரது ஏற்பாட்டின்படி, யேல் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஷாருக்கான் வந்திருந்தார். அவருடன் இஷாவின் தாய் நீடா அம்பானி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர். நியூயார்க் விமான நிலையத்தில் அனைவரையும் குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். நீடா அம்பானி உள்பட எல்லோருடைய ஆவணங்களையும் உடனடியாக சரி பார்த்த பின்னர் அதிகாரிகள் அவர்களை அனுப்பினர். ஆனால், ஷாருக்கானை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய பிறகே அவரை வெளியில் விட்டனர். இதனால் ஷாருக்கான் மிகவும் அதிருப்தி அடைந்தனர். யேல் பல்கலை பிரதிநிதிகள், ஷாருக்கானை சாமாதானப்படுத்தி சகஜநிலைக்கு கொண்டு வர பெரும் பாடுபட்டனர். அமெரிக்காவில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது ஷாருக்கானுக்கு இது முதல் முறை அல்ல. இதற்கு முன் மூன்று நான்கு முறை விமான நிலையத்தில் ஷாருக்கானை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook