ஈசிஆரில் கார்-வேன் மோதல் : இன்ஜினியர் பரிதாப பலி
திருக்கழுக்குன்றம் : கார் மீது வேன் மோதியதில் இன்ஜினியர் பரிதாபமாக இறந்தார். டிரைவர் படுகாயம் அடைந்தார். கல்பாக்கம் அடுத்த புதுபட்டினத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (27). ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கம்பெனியில் வேலை முடிந்ததும் வசந்தகுமார் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் அரவிந்த் சுப்பிரமணியன் (34) காரை ஓட்டி வந்தார் கிழக்கு கடற்கரை சாலை வெங்கப்பாக்கம் அருகே வரும் போது புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வேகமாக வந்த வேன் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரின் முன்பகுதியில் டிரைவர் சீட் அருகே உட்கார்ந்திருந்த வசந்தகுமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிரைவர் அரவிந்த் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் சதுரங்கபட்டினம் போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். வசந்தகுமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தப்பியோடி விட்டார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.