சென்னை : சென்னையில் அரசு சார்பில் இன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் சிறந்த தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா., அவ்வையார் பெயர்களில் சிறப்பு விருதுகள் மற்றும் தங்கப் பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் தமிழ் புத்தாண்டு விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், இன்று மதியம் 12.15 மணிக்கு தமிழ் புத்தாண்டு விழா நடந்தது. சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், சிறந்த தமிழறிஞர்களுக்கு அவ்வையார், கபிலர், உ.வே.சா. ஆகியோர் பெயரிலான விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவித்தார். கபிலர் விருதை பேராசிரியர் அ.அ.மணவாளன், உ.வே.சா. விருதை புலவர் செ.இராசு, அவ்வையார் விருதை ராஜலட்சுமி பார்த்தசாரதி ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கப் பதக்கம், தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டன. மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த் தாய் விருது வழங்கப்பட்டது. விருது தொகையாக ரூ.5 லட்சம், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திருக்குறள் ஒப்பித்தல், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கும் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். முன்னதாக, காலை 8.30 மணிக்கு ‘துறை தோறும் தமிழ்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பழ.கருப்பையா எம்எல்ஏ தலைமை தாங்கினார். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், மேயர் சைதை துரைசாமி, நடிகர் சிவக்குமார், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருமலை, கோமதிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். காலை 9.30 மணிக்கு ‘முத்திரை பதிக்கும் சித்திரை’ என்ற தலைப்பில் கவிஞர் புலமைபித்தன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. அதை வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். 10.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றத்தை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook