பள்ளிப்பட்டு தாசில்தார் ஆபீசில் சான்றிதழ்களுக்கு அலையும் மக்கள்
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ்கள் கேட்டு மக்கள் நடையாய் நடந்து வருகின்றனர். புரோக்கர்களை பிடித்தால்தான் காரியம் எளிதாக முடிகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை, வருமான, சாதி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை ஆகியவை கேட்டு பொதுமக்கள் விண்ணப்பம் கொடுக்கின்றனர். இதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கும்போது ஊழியர் ரசீது போட்டு கொடுப்பார். என்ன சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். எந்த தேதியில் கிடைக்கும் என்ற விவரம் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். குறிப்பிட்ட தேதியில் போய் கேட்டால் சான்றிதழ் தயாராக இருக்காது. அடுத்த வாரம் என்று கூறி பல வாரங்கள் இழுத்தடிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். வெகுதூரத்தில் இருந்து வருப வர்கள் நாள் முழுக்க காத்துக் கிடந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
ஆனால், தாசில்தார் அலுவலக பகுதியில் சுற்றும் புரோக்கர்களை அணுகினால் வேலை எளிதாக முடிந்துவிடுகிறது. பலர் புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து காரியத்தை முடித்துவிடுகின்றனர். பணம் கொடுக்க முடியாதவர்கள் அலுவலகத்துக்கு நடந்துகொண்டு இருக்கின்றனர். வெடியங்காடு, பைவலசா, செங்காடுனூர், ராமாபுரம், எரும்பி, புத்தேரி, மயிலாடுவாடா, பத்மபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சான்றிதழ் கேட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.