சேதமடைந்த சாலைகளால் மாதவரம் மக்கள் கடும் அவதி
திருவொற்றியூர் : மாதவரம் மண்டலக் குழு கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். உதவி ஆணையர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சந்திரசேகரன் (திமுக): மாதவரத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது. மாநகராட்சியுடன் மாதவரம் இணைக்கப்பட்ட பிறகு மக்கள் நலப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. திட்டப் பணிகளுக்காக ரூ.15 கோடிக்கு மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் இதைவிட திட்டப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் பாரபட்சம் காட்டுவது ஏன்?
உதவி ஆணையர்: மாதவரத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகள் நடப்பதால் தற்காலிகமாக சாலை போட முடியாத நிலை உள்ளது. அடுத்தமுறை கூடுதலாக திட்ட மதிப்பீடு தயார் செய்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
தட்சிணாமூர்த்தி (அதிமுக): மாதவரத்தில் பல இடங்களில் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கில் கழிவுநீர் நிரம்பியுள்ளது. அதை அகற்ற 2 லாரிகள் மட்டுமே உள்ளன. கூடுதலாக கழிவுநீர் லாரி வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாந்தி எத்திராஜ் (அதிமுக): எனது வார்டில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். குடிநீரும் சரியாக கிடைப்பதில்லை.
தலைவர் வேலாயுதம்: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.