அனல்மின் நிலையத்தில் இருந்து இரும்பு பைப் கடத்திய 2 வாலிபர்கள் கைது
பொன்னேரி : மீஞ்சூர் அருகே அனல்மின் நிலையத்தில் இருந்து இரும்பு பைப்களை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே தேசிய அனல்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சாரம் கட்ட வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து அனல்மின் நிலைய மேலாளர் சிலம்பரசன், மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ லாரன்ஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.இந்நிலையில், மீஞ்சூர் அருகே பூங்கமேடு பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது இரும்பு பைப் ஏற்றி வந்த ஆட்டோவை மறித்து விசாரித்தனர். அனல்மின் நிலையத்தில் இருந்து இரும்பு பைப்களை திருடி வந்தது தெரிந்தது. ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இரும்பு பைப் கடத்திய மணலியை சேர்ந்த ராஜீவ் காந்தி (26), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் பத்மநாபன் (23) இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.