தமிழ் முரசு செய்தி எதிரொலி அம்பேத்கர் சிலை நிறுவும் பணி துவக்கம்
பொன்னேரி : பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளிவாயல் சாவடி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இதன் எதிரே அம்பேத்கரின் முழு உருவ சிலை இருந்தது. சாலை விரிவாக்கத்தின்போது, நெடுஞ்சாலை துறையினர் சிலையை அப்புறப்படுத்தினர். வேறு இடத்தில் சிலையை வைக்க அப்போது வெள்ளிவாயல் சாவடி ஊராட்சி தலைவராக இருந்த ரமேஷிடம் 72 ஆயிரம் ரூபாயை நெடுஞ்சாலை துறை வழங்கியது. ஆனால், சிலையை வேறு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்காமல், நெடுஞ்சாலை ஒரத்தில் அனாதையாக போட்டுவிட்டனர்.இதுபற்றிய செய்தி தமிழ் முரசு நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ரமேஷை சந்தித்து, சிலையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டனர். நெடுஞ்சாலை துறை கொடுத்த 72 ஆயிரம் மற்றும் கிராம மக்கள் வசூலித்து கொடுத்து நிதியை சேர்த்து வெள்ளிவாயல் சாவடி நடுநிலை பள்ளி வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. இதற்கான கட்டிட பணிகள் ஆரம்பித்துள்ளன.