திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு நாளை கூடுகிறது
சென்னை : திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க் குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் வரும் 23ம் தேதி கொண்டு வரப்படுகிறது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே தீர்மானம் குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம், எந்த ஒரு நாட்டுககு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பதில்லை என்பது இந்தியாவின் முடிவு என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதையடுத்து நாளை திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் அவசரமாக கூடுகிறது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் குறித்தும் மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.