நெல்லை : கூடங்குளத்தில் இன்று தென் மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், தென் மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 8 மாதங்களாக அணுமின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாக தெரிகிறது.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி 8 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அவர்களது அச்சத்தை போக்க மத்திய, மாநில நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று அறிக்கை அளித்தனர். ஆனால் இந்த அறிக்கைகளை போராட்ட குழுவினர் ஏற்கவில்லை. பிப்ரவரியில் முதல்வரை சந்தித்த அவர்கள் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு பதில் இயற்கை எரிவாயுவை கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்று வலியுறுத்தினர். அதற்கு முதல்வர் ஜெயலலிதா எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏடிஜபி ஜார்ஜ், கூடங்குளம் பகுதியில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதே சங்கரன்கோவில் தேர்தலுக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அணுஉலை ஆதரவாளர்கள் கூறினர். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முடிந்த நிலையில் தென் மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ் இன்று கூடங்குளத்துக்கு வந்தார். தென் மாவட்டங்களை சேர்ந்த 10 எஸ்.பி.க்களும் ஆலோசனை நடந்தது. போராட்ட குழுவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், அவர்கள் எந்தெந்த வழியாக போராட வருகின்றனர்? இதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனம் மற்றும் கலவர தடுப்பு போலீசார், கண்ணிர் புகை குண்டு போலீஸ் பிரிவினர் என பல்வேறு பிரிவினர் கூடங்குளத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியிலும் போலீஸ் குவிப்பு : அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் போராட்டம் நடத்தினர். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தூத்துக்குடி கடலோர பகுதியிலும் போராட்டம் தீவிரமாகும் என்று உளவு துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து வேம்பார் முதல் பெரியதாழை வரை கடலோர கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 32 கம்பெனி துணை ராணுவத்தினரும் இன்று மாலைக்குள் பாதுகாப்புக்காக வருகின்றனர்.இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கடலோர மக்கள் கூட்டத்தை போராட்ட குழுவினர் கூட்டியுள்ளனர்.
போலீசுக்கு மண்டபங்கள் முன்பதிவு
கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தங்குவதற்காக திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கண்ணீர் புகை குண்டு பிரிவு போலீசார், கலவர தடுப்பு போலீசார் என அனைத்து பிரிவு போலீசாரும் வந்துள்ளதால் கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களுடன் ஜெ. ஆலோசனை
தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று பகல் 12.30 மணிக்கு சென்னை கோட்டையில் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து அமைச்சர்களும் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தனர். அமைச்சரவை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை பிரச்னை, தமிழக பட்ஜெட் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook