தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி 20ல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் : ஓமலூர் கோர்ட் உத்தரவு
ஓமலூர் : தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் லட்சுதிபதி ஆகிய இருவரும், வருகிற 20ம் தேதி ஓமலூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி இன்று உத்தரவிட்டார். வன்னியர் சமுதாயம் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் லட்சுமிபதி மீது ஓமலூர் நீதிமன்றத்தில் பாமக மாநில துணை பொது செயலாளர் தமிழரசு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் 13ம் தேதிக்குள் (இன்று) கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், கிருஷ்ணமூர்த்தி, லட்சுதிபதி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்களின் சார்பாக, ஆஜரான வக்கீல்கள் ஒரு வாரம் அவகாசம் கேட்டனர். இதற்கு பாமக தரப்பில் ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 20ம் தேதி கிருஷ்ணமூர்த்தி, லட்சுதிபதி ஆகிய இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.