நெல்லை : சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொகுதியை முற்றுகையிட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா நாளை பிரசாரத்துக்கு வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடக்கிறது. வரும் 16ம் தேதி (வெள்ளி) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாஜ உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் சங்கரன்கோவிலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து, மத்திய அமைச்சர் அழகிரி பிரசாரம் செய்து வருகிறார். கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 3 தினங்கள் பிரசாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா நாளை பிரசாரம் செய்கிறார். சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், அதிமுக வேட்பாளரை ஆதரித்து தொகுதியில் 10 இடங்களில் பேசுகிறார். முதல்வரின் வருகைக்காக திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி, தேவர்குளம் ஆகிய 2 இடங்களில் ‘ஹெலிபேட்‘ அமைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
முதல்வரை வரவேற்பது குறித்து ராஜபாளையத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், அமைச்சர்கள் வளர்மதி, தங்கமணி, விஜய், சுந்தர்ராஜ், முகமது ஜான், அமைப்பு செயலாளர்கள் பி.எச்.பாண்டியன், மாணவரணி செயலாளர் சரவண பெருமாள் ஆகியோர், ஜெயலலிதா சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள தேரடி வீதி, சங்கரன்கோவில் ரதவீதிகளை ஆய்வு செய்தனர். ஜெயலலிதாவின் வருகையையொட்டி 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பகல் 1 மணிக்கு திருவேங்கடம் பள்ளி ஹெலிபேட் தளத்தில் இறங்கும் ஜெயலலிதா, திருவேங்கடம் மெயின் பஜாரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்பின் குருவிகுளம் ஒன்றியத்துக்குஉட்பட்ட பகுதிகள், சங்கரன்கோவில் பகுதிகளிலும், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர் தேவர்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை புறப்படுகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook