சென்னை மாநகராட்சி பட்ஜெட் விவாதிக்காமல் நிறைவேற்றம் மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை : சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதே தினத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 2012-13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டு அதே தினத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நடைமுறை கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் மாநகராட்சியின் பட்ஜெட் முதல் நாள் தாக்கல் செய்யப்பட்டு, மறுநாள் விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றும் நடவடிக்கை இருந்து வந்தது.
உறுப்பினர்கள் தங்கள் வட்டங்களுக்கான தேவைகளை கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்த்து கருத்து தெரிவிக்க வாய்ப்பிருந்தது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு கட்டமைப்புகள் குறிப்பாக கல்வி, மருத்துவமனை, சுகாதாரம், சாலை, பாலங்கள் உள்ளிட்ட அம்சங்கள் பற்றி குறிப்பு தயாரிக்கவும் வாய்ப்பிருந்தது. உள்ளாட்சி என்பது மக்களின் நேரடி பங்கேற்புடன் நடப்பதே சிறப்பு. ஆனால் சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை ஜனநாயக நடைமுறையை முடக்கும் வகையில் உள்ளது.