மொகாலியில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் என்ற புலனாய்வு பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டது. வீரர்களை கவர பிரபல இந்தி நடிகை நுபுர்மேத்தா என்பவரை சூதாட்ட தரகர்கள் பயன்படுத்தியதாகவும், பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடவும், பவுலர்கள் ரன்னை வாரி இறைக்கவும், போட்டி முடிவை நிர்ணயிக்கவும் லட்சக்கணக்கில் சூதாட்டக்காரர்கள் பணத்தை வாரி இறைத்ததாகவும் அந்த பத்திரிகை பரபரப்பாக குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் இந்த செய்திகளை நடிகை நுபுர்மேத்தா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பரபரப்பான செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடி கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகை என் பெயரை கிரிக்கெட் வீரர்களுடன் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி. கிரிக்கெட் வீரர்களுக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அப்படியே நான் விருந்துகளில் வீரர்களுடன் கலந்து கொண்டாலும் அது தொடர்பான ஆதாரங்களை வெளியிடட்டும். எனது அனுமதியில்லாமல் எனது பெயரையும், படத்தையும் பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் என் மீது எந்த தவறும் கிடையாது. எங்கும் ஓட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஐசிசி மறுப்பு உலககோப்பை அரை யிறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததாகவும், இந்த சூதாட்டத்திற்கு பிரபல நடிகை பயன்படுத்தப்பட்டதாகவும் இதுதொடர்பாக ஐசிசி விசாரணை நடத்தி வருவதாகவும் லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த தகவலை ஐசிசி முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஹாரூன்லோர்கெட் கூறுகையில், உலககோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெறவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. விசாரணை நடைபெறுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook