பெருங்குடி அருகே கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை
துரைப்பாக்கம் : சென்னை அடுத்த பெருங்குடி சீவரம் ராஜீவ்காந்தி சாலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். சுற்றியுள்ள பகுதி மக்கள், அம்மனை வழிபடுவார்கள். வழக்கம் போல நேற்றிரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பூசாரி சுப்பிரமணி (41). இன்று காலையில் மீண்டும் நடையை திறக்க வந்தார். அப்போது கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் உள்ள பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் குப்புசாமி, அங்கசாமியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.