டேங்கர் லாரி ஸ்டிரைக் 2வது நாளாக நீடிக்கிறது சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை : 20 ஆயிரம் டன் கேஸ் சப்ளை பாதிப்பு
நாமக்கல் : சமையல் எரிவாயு ஏற்றி செல்லும் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 29ம் தேதி நள்ளிரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். வாடகை உயர்வு, அனைத்து வண்டிகளுக்கும் வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய 5 மாநிலங்களில் ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் சமையல் எரிவாயு வினியோகம் முடங்கியுள்ளது. 4000 எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு 9 சுத்திகரிப்பு நிலையங்களும், 50 பாட்டிலிங் பிளான்ட்களும் உள்ளன. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் எடுத்து வரப்படும் சமையல் கேஸ் பாட்டிலிங் பிளான்ட்களில் இறக்கப்படுகிறது. தினமும் 10 ஆயிரம் டன் சமையல் கேஸ் பாட்டிலிங் பிளான்ட்களில் இறக்கப்படும். கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் காரணமாக கடந்த 2 நாளில் 20 ஆயிரம் டன் சமையல் கேஸ் எடுத்து செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளை சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்து தென்மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது: தமிழக அரசின் நுகர்பொருள் வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (3ம் தேதி) காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 18ம் தேதி இது போன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஆயில் நிறுவன அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை ஏற்று ஸ்டிரைக்கை அப்போது வாபஸ் பெற்றோம். தற்போது மீண்டும் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதுÕ என்றார்.