குடிநீர் வினியோகம் பாதிப்பு காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி ஆபீசை முற்றுகை
ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அருகேயுள்ள பனையஞ்சேரி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்றும், சிலர் மோட்டார் பொருத்தி அதிகளவு தண்ணீரை உறிஞ்சுவதாகவும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதியினர் காலிக் குடங்களுடன் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஊராட்சி தலைவர் மார்க்கண்டேயன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ‘சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் சரிவர தண்ணீர் வழங்க முடியவில்லை. மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழாயை சரிசெய்து உடனடியாக தண்ணீர் வினியோகிக்கப்படும்’ என்றனர். இதனால் சமாதானம் அடைந்த மக்கள் 2 மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.