சிக்னல் கோளாறு: மின்சார ரயில் நடுவழியில் நின்றது : அலுவலகம் செல்லும் பயணிகள் டென்ஷன்
சென்னை : தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்காக மக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். தாம்பரத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. தாம்பரம் - சானிடோரியம் இடையே 3 சிக்னல்கள் உள்ளன. 2 சிக்னல் கிடைத்துவிட்டது. ஒரு சிக்னல் மட்டும் சுமார் அரை மணி நேரமாக கிடைக்கவில்லை. இந்த சிக்னலுக்காக ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதே போல், கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயில்களும் சிக்னல் கிடைக்காமல் வழியிலேயே நின்றது. இதுகுறித்து தாம்பரம், சானிடோரியம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்தனர். அதன்பின், 9.15 மணியில் இருந்து மின்சார ரயில்கள் இயங்க தொடங்கியது. 45 நிமிடம் மின்சார ரயில்கள் இயங்காததால், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர் டென்ஷன் ஆனார்கள். இந்த சிக்னல் கோளாறால் தாம்பரத்தில், சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் சிக்னலில் கோளாறு ஏற்படுகிறது. இதனை சமாளிக்க ஜெனரேட்டர் இருந்தும், அதுவும் சரியாக இயங்கவில்லை’’ என்றார்.