மாஜி முதல்வர் குமாரசாமி மீது மேலும் ஒரு வழக்கு
பெங்களூர் : கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது லோக் ஆயுக்தா கோர்ட்டில் புதிதாக ஒரு நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதாதள மாநில தலைவர் குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்தார். அப்போது பெங்களூர் வளர்ச்சி ஆணையத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.56 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பெங்களூரைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் லோக் ஆயுக்தா கோர்ட்டில் நேற்று புகார் கொடுத்தார். இந்த புகாரில் குமாரசாமி மற்றும் அவரது மனைவி உள்பட 18 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்து லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே.சுதீந்திர ராவ் நாளை முடிவு செய்கிறார். அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததாக குமாரசாமி மீது ஏற்கனவே ஒரு வழக்கு லோக்ஆயுக்தா கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எடியூரப்பா பதவி பறிப்புக்கு காரணமான கர்நாடக சுரங்க மோசடியிலும் குமாரசாமிக்கு பங்கு இருப்பதாக லோக்ஆயுக்தா முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.