திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 22 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு
திருமலை : திருப்பதி ஏழுமலையானை 22 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது. கொட்டும் மழை, பனி இவற்றையெல்லாம் பக்தர்கள் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று அதிகாலை 1 மணி வரை சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நள்ளிரவு 1 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் 22 மணி நேரத்திற்கு கூடுதலாகவும், நடைபாதையில் செல்லும் திவ்ய தரிசனத்துக்கு 5 மணி நேரமும், 50 ரூபாய்க்கான சுதர்சன தரிசனத்தில் 3 மணி நேரமும், 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு டிக்கெட்டில் 5 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பிரதான கல்யாண கட்டாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்களை சோதனை செய்ய சுமார் அரை மணிநேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். திருமலைக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பக்தர்கள் தங்கும் அறையான வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 28 அறைகள் நிரம்பியுள்ளன. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.