ஆவடி : பட்டாபிராமில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, கோயிலில் பெண்கள் பிரார்த்தனை செய்தனர். கடை மீது முட்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி அருகே பட்டாபிராம் பாரதியார் நகர் சிடிஎச் சாலையில் ஸ்ரீதரபெருமாள் கோயில், திருமண மண்டபம், வங்கி, தபால் நிலையம் மற்றும் மருத்துவமனை உள்ளது. கோயில் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடிமகன்களால் தொந்தரவு அதிகரித்தது. இதனால், கடையை அகற்ற வேண்டும் என பாரதியார் நகர் குடியிருப்போர் பொது நலச் சங்கம், பொது மக்கள் ஆகியோர் 3 ஆண்டுகளாக வலியுறுத்தினர். முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். ஆனால், கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பிறகு, சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது வந்த டாஸ்மாக் அதிகாரிகள், கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். இதன்பிறகும் கடை அகற்றப்படவில்லை.
இன்று காலை 11 மணிக்கு பாரதியார் நகரை சேர்ந்த பெண்கள் உள்பட 200 பேர் திரண்டனர். மங்கல வாத்தியம் முழுங்க பெண்கள் ஊர்வலமாக வந்தனர். 600க்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனுவை கோயிலில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். ‘டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு ஆண்டவன்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என பிரார்த்தனை செய்தனர். அந்த மனுவை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினர். கோயிலில் இருந்து வெளியே வந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன் முட்டைகளை உடைத்தனர். ஷட்டர் மீது முட்டைகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில், பாஜ, இந்து முன்னணி, மகளிர் சுயஉதவிக் குழு, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.