Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
24
Jan
எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?


தேர்வு பயத்தினால் ஹார்மோன்க ளின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன்  பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிக  மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப் பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும். இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.  படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள். - ஸ்ரீதேவி


ரெசிபி

பிரட் புதினா சாலட்: புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் - கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.

முளைப்பயறு துவையல்: ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும். முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

சோயாவடை: ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

டயட்

தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது. எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.  எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
*  சிறு கீரையுடன் மிளகுத்தூள், உப்பு போட்டு சமைத்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  செலரிக் கீரையுடன் திப்பிலி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*   தக்காளி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை தின மும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
*  திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் மறதி குறையும்.
*  புளியாரை கீரையுடன் வேப்பந்துளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மை அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* பொன்னாவரைக் கீரையின் விதையை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana