மிர்பூரில் நடந்த 2020 ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசம் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. ஹபீஸ் 25 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 9 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
மீண்டும் சமரவீரா இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இலங்கை அணியில் முதலில் புறக்கணிக்கப்பட்ட சீனியர் வீரரான சமரவீரா தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசி. ஆஸி. நாளை மோதல்
2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் போட்டி பிரிஸ்பனில் நாளை காலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆஸி. அணியில் முன்னணி வீரர்கள் 5 பேர் காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை. இதனால் நெருக்கடியுடன் ஆஸி. களமிறங்குகிறது.
பல ‘கோச்’ சரிவராது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விரைவில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைக்கும் தனித்தனி பயிற்சியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் பாகிஸ்தான் அணிக்கு ஒத்துவராது என மாஜி வீரர் வாசிம்அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். பல கோச்கள் நியமித்தால் அணியில் தேவையில்லாத சர்ச்சைகள்தான் உருவாகும் என அவர் கூறியுள்ளார்.
பெடரர் 3வது இடம்
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் செர்பியாவின் ஜோகோவிக்கும், 2வது இடத்தில் ஸ்பெயினின் ரபேல்நடாலும் உள்ளனர்.
ஹர்பஜன் காயம்
ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணி கேப்டனாக ஆடிவரும் ஹர்பஜன்சிங்கிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று தொடங்கும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிறுதியில் இந்தியா
தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 70 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி மலேசியாவை எதிர்த்து ஆடுகிறது.
வெளியேறினார் அகர்கர்
ரஞ்சிகோப்பையில் ஒரிசா அணிக்கு எதிராக விளையாடும் லெவனில் இருந்து கடைசி நேரத்தில் மும்பை வீரர் அகர்கர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். ஜாகீர்கான் உடல் தகுதியை பெற விளையாடுவதால் சால்வியை தேர்வு செய்வதா அல்லது அகர்கர்கரை தேர்வு செய்வதா? என அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. முடிவில் அகர்கர் நீக்கப்பட்டார். இதுகுறித்து அகர்கர் கூறுகையில், தற்போது அதிக வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். எனினும் அணி நிர்வாகத்தினர் இந்த முடிவை என்னிடம் முன்பே தெரிவித்திருக்கலாம். நாளை போட்டி என்றால் இன்றிரவு கூறுகிறார்கள். முன்பே கூறியிருந்தால் நான் கட்டாக் வந்திருக்க மாட்டேன் என்றார். தொடர்ந்து அகர்கர் உடனடியாக மும்பை திரும்பினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook