தமிழ், தெலுங்கு ரசிகர்கள் பற்றி நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு !
சென்னை : தெலுங்கு பட விருது வழங்கும் விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார். தெலுங்கில் பேசி அசத்திய அவர் அங்குள்ள ரசிகர்களை பாராட்டினார். ‘தமிழில் விமர்ச்சிக்கப்படுகிற என் படங்களைக்கூட தெலுங்கு ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அவர்களை மிகவும் நேசிக்கிறேன்’ என்று கூறினார். இவரது பேச்சு தமிழ் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கார்த்தியிடம் கேட்டபோது கூறியதாவது: விருது விழாவுக்கு விருந்தாளியாகத்தான் போனேன். என் பேச்சை இன்டர்நெட்டில் பார்த்த நண்பர்கள் சிலர்கூட, ‘ஏன் இப்படி பேசினாய்’ என்று கேட்டார்கள். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன். தமிழ் திரையுலகில் இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். ‘அப்பா, அம்மாவை எனக்கு பிடிக்கும்’ என்று தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோமா. அப்படி சொல்லவில்லை என்பதற்காக அவர்கள் மீது பாசம் இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோலத்தான் இதுவும். தமிழ் ரசிகர்கள் உணர்ச்சிகரமானவர்கள். தங்களுக்கு பிடித்த ஹீரோவை மிகவும் நேசிப்பார்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தமிழில் வெளியானபோது விமர்சிக்கப்பட்டது. தெலுங்கில் வெற்றிகரமாக ஓடியது. சிறுத்தை தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. அதே படம் மீண்டும் தெலுங்கில் ரிலீஸ் ஆனபோது வெற்றி பெற்றது. தெலுங்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பாராட்டவே இப்படி சொன்னேன். தமிழ் ரசிகர்கள் மீது எப்போதும் அன்பு உண்டு. இவ்வாறு கார்த்தி கூறினார்.