வகுப்பறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்த மாணவன்
கோவில்பட்டி : ஆசிரியர் அடித்ததாக கூறி விஷம் குடித்த மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் மணியாச்சியைச் சேர்ந்த பாண்டி மகன் முத்துப்பாண்டி(17). இவர் கோவில்பட்டி இலுப்பையூரணியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று மதியம் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை முத்துப்பாண்டி கேலி செய்தாராம். இதைபார்த்த உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த பிரபாகரன், அந்த மாணவரை அழைத்து திட்டியதோடு அடித்ததாக தெரிகிறது. மேலும் பெற்றோரை அழைத்து வரும்படி கூறினாராம். இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டி பள்ளியில் இருந்து வெளியேறினார். மாலையில் மீண்டும் பள்ளி திரும்பிய அவர் தனது வகுப்பறையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்கள் விசாரித்ததில், தான் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். உடனே அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்தார்.