செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் மைய பகுதியில் உள்ள குண்டூர் ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி உடையும் தருவாயில் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கொளவாய் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகு பகுதியை திறந்து விட்டனர். இதனால், திம்மாவரம், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
செங்கல்பட்டு குண்டூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், செங்கல்பட்டு காண்டீபன் தெரு, வீரக்குடி வேலாளர் தெரு, வரதராஜனார் தெரு ஆகியவற்றின் மூலம் வெளியேறியதால் நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மொட்டை மாடியிலும், அருகில் உள்ள திருமண மண்டபத்திலும் தஞ்சம் புகுந்தனர். செங்கல்பட்டு அண்ணா நகரில் மேலமையூர் ஏரி நிரம்பியதால் உபரி நீர், அண்ணா நகரில் உள்ள 15 தெருக்களில் புகுந்தது. பொதுமக்கள் தவித்தனர். செங்கல்பட்டையொட்டியுள்ள வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதிகளில் செங்கல்பட்டு எம்எல்ஏ அனகை முருகேசன், நகராட்சி தலைவர் அன்புசெல்வன், கவுன்சிலர்கள் கோவிந்தன், சந்தோஷ் கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர், மழை நீரை வெளியேற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook