அணுமின் நிலைய இயக்குனர் அடிக்கல் நாட்டினார் வடகடும்பாடி ஆரம்ப பள்ளிக்கு 21 லட்சத்தில் புதிய கட்டிடம்
திருக்கழுக்குன்றம் : மாமல்லபுரம் அடுத்த வடகடும்பாடி ஊராட்சி நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் ஒன்றிய ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. வடகடும்பாடி ஊராட்சி தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேசமூர்த்தி, தலைமை ஆசிரியை திரிபுர சுந்தரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணை தலைவர் ரஜினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை அணுமின் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தி பங்கேற்று அடிக்கல் நாட்டி பேசினார். வடகடும்பாடி கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளிக்கு மேஜையுடன் கூடிய 3 கம்ப்யூட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அணுமின் நிலைய முதன்மை கண்காணிப்பாளர் ராஜ்புத், தரக்கட்டுப்பாடு கண்காணிப்பாளர் சுரேஷ், அணுமின் நிலைய அதிகாரிகள் தனசேகரன், பி.கே.சிங், நிர்மலாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.