சென்னை : அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இடமாற்றத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் 4 நாளில் 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் இள. புகழேந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த 21ம் தேதி முதல் வருகிற 27ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் கடந்த 4 நாட்களில் சென்னை உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகம், லயோலா கல்லூரி, தியாகராயர் கல்லூரி, வடசென்னை பகுதி, திருவிக நகர் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து வரும் 27ம் தேதி வரை சென்னையில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கையொப்பம் பெறப்பட உள்ளது. இவ்வாறு இள புகழேந்தி கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook