திருச்சி : திருச்சி பொன்மலை பகுதி அதிமுக செயலாளர் ‘பன்னி’ சேகர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். திருச்சி மாநகராட்சி பொன்மலை பகுதி அதிமுக செயலாளர் ‘பன்னி‘ சேகர்(46). மேலஅம்பிகாபுரம் திடீர் நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி கயல்விழி, மாநகராட்சி 29வது வார்டு அதிமுக கவுன்சிலர். சேகரும் அவரது அண்ணன் பெரியசாமியும் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்ததால் இவர்களை பன்னி பெரியசாமி, பன்னி சேகர் என்று அழைப்பர். இருவர் மீதும் அடிதடி, கொலை வழக்குகள் உள்ளன. கடந்த 1999ல் பெரியசாமி இறந்து விட்டார். அதன்பிறகு சேகர் பன்றி வளர்ப்புடன், கேபிள் ஆபரேட்டர் தொழிலும் செய்து வந்தார். அண்ணன் இறந்த பிறகு சொத்துக்கள் முழுவதும் இவரே எடுத்துக்கொண்டதாகவும், அண்ணனின் இரு மனைவிகளுக்கோ, அவர்களது மகன்களுக்கோ கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அண்ணன் குடும்பத்துக்கும், சேகருக்கும் விரோதம் ஏற்பட்டது. பெரியசாமியின் முதல் மனைவியின் மகன் சிலம்பரசன்(25), சித்தப்பா சேகரிடம் தங்களுக்கு சொத்துக்களை பிரித்து தரும்படி கேட்டார். அவர் மறுத்து விட்டதால் அவர்களுக்குள் பகை வளர்ந்தது. சித்தப்பாவை தீர்த்து கட்ட சிலம்பரசன் திட்டமிட்டுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு சேகர் அம்பிகாபுரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை சிலம்பரசன், மற்றும் 4 பேர் வழிமறித்தனர். அவர்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த சேகர் பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடினார். 5 பேரும் அவரை விடாமல் துரத்தி சரமாரியாக வெட்டிக் கொன்று தப்பினர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். சேகரின் மனைவி கயல்விழி தற்போது 2வது முறையாக மாநகராட்சி கவுன்சிலராக இருக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook