வெங்காயம், சர்க்கரை, பருத்தி ஏற்றுமதிக்கு தடை கூடாது : மகாராஷ்டிர முதல்வர் கடும் எதிர்ப்பு!
நாசிக்: வெங்காயம், சர்க்கரை, பருத்தி மற்றும் மஞ்சள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெங்காயம், பருத்தி, மஞ்சள் போன்ற பணப் பயிர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயரும்போது இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை செய்துவருகிறது. கடந்த ஆண்டு வெங்காயம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தபோது ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெங்காய விலை வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதேபோல் சர்க்கரை, பருத்தி மற்றும் மஞ்சளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் வெங்காயம், கரும்பு போன்றவற்றின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் ஏற்றுமதிக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தடையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலனில் காங்கிரஸ் அரசுக்கு அதிக அக்கறை இருப்பதாக தெரிவித்த சவான், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக கூறினார்.