பெங்களூர்: சுரங்க முறைகேடு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது சிபிஐ போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த எப்ஐஆரில் பா.ஜ. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இரும்பு சுரங்கங்கள் நிறைய உள்ளன. அரசிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சுரங்கங்களை நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள், அரசுக்கு சரியாக கணக்கு கொடுக்காமல் திருட்டுத்தனமாக கோவா, ஆந்திரா வழியாக வெளிநாடுகளுக்கு இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒப்பந்தம் பெறுவதிலும் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பெல்லாரியில் ஒட்டுமொத்தமான சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில், பா.ஜ. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கடந்த மாதம் சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அமைச்சரவையில் சுரங்க துறை அமைச்சராக இருந்த முனியப்பா மீதும் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜியாலஜி துறை இயக்குனர் எம்.இ.சிவலிங்க மூர்த்தி, தடை செய்யப்பட்ட பகுதி யில் சுரங்கம் நடத்தி வந்த அசோசியேட்டட் சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி அருணா உள்பட 21 மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சுமி அருணா, பா.ஜ. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook